எனது வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, November 27, 2013

உயிரானவள்

சொந்தங்கள் பலவும் கடந்த – எனக்கு
சொர்க்கமே செல்லாமல்
சொர்க்க இன்பத்தை தந்தவள் நீ!

அன்னையைப் போற்றும் இவ்வுலகம்
பிள்ளையின் பெருமையை
சொல்ல மறந்ததேனோ?

நீயின்றி கிடைத்ததோ தாய்மை,
உன்னால் தானே எனக்கு பெருமை
அன்னை என்ற அன்பு வார்த்தைக்கு
என்னை உரியவளாக்கிய நீ
என் இளவரசியே!

மலடி எனும் மரணச் சொல்லை
நான்  செவிமடுக்கவில்யென்றால் - அது
உன்னால்தானே!

கஷ்டங்கள் வந்தபோதிலும்
உன் கலகலப்பான சிரிப்பில்;
மறந்தே போனேன் அனைத்தையும்!

சகுனம் என்ற பெயரில்
கொடூர சொல்லால் மரண வேதனை
தரும் நம் சமுகம்
பிள்ளையற்றவளுக்கு பெரிய
சகுனமல்லவா பார்க்கிறது?

அந்த
கொடிய சொல்லைக் கேட்காமல்
குதூகலத்தில்
என் உள்ளத்தைக் குளிர வைத்த
நீ...
என் சிரேஷ்ட
புதல்வி மட்டுமல்ல
என் உயிரானவளும் கூட!!!

கானல் நீர்

பாசம் வைத்த
உறவுகள் எல்லாம்
என் கண்ணில்
கானல் நீராக!

உறவு என்ற வார்த்தைக்கு
உயிர்கொடு
உண்மை அன்பே – அந்த
உறவுக்காகவே
உயிரையும் கொடு!

பொய்யான பாசங்கள்
தடயமின்றி
புதைந்து போகும்..
உண்மை நேசம் ஒன்றே
விலைமதிக்க முடியாத
புதையலாகும்!

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
அன்பை நிரப்பிடு
உன் உயிர் கூட்டிற்குள்!

மனிதப் பிறவி ஒன்றுதான்..
மீண்டும் பிறப்பது இல்லைத்தான்..

வஞ்சனையை விட்டெறிந்து
நேர்மையை நிலை நிறுத்து...
இறந்த பின்னும் வாழுமே
அன்பெனும் அழியா சொத்து!!!

அன்னை

அன்னையே
உன் சிறப்பை அறிந்தது
என் செல்ல மகளின் பிறப்பின் போதே!

வலிகளிலும் வடிந்தோடும் கண்ணீரிலும்
வேதனை தெரியவில்லை!
இன்னிசையான இசையாய்
குவா... குவா... என்ற
யாராலும் இயற்ற முடியாத இசை!

இந்நேரம் நான் இன்புற்ற
இந்த இசையை
அன்றொரு நாள் எனக்காக
என் தாய் பெற்றிருப்பாள்!
ஆனந்தம்மம்மா ஆனந்தம்
நானும் ஒரு பெண்ணாக பிறந்ததையெண்ணி!

வீதியோரம்
விளையாட...
நான் ஓட...
உன் விழிமேல்
என் விம்பம்
மட்டும் ஓட...
என்னையே பார்ப்பாயே!

நீ கண்டிப்பானவள் என்றெண்ணி
உன் கண்ணை கட்ட நினைத்துண்டு!

இன்றல்லவா தெரிகிறது
என் தாய் கண்டிப்பானவளல்ல
என்னை உயிர் மூச்சாய்
எண்ணியவளென்று!

நானும் ஒரு தாயானேன் - உன்
உள்ளம் நானறிந்தேன்!

என் பிள்ளை எனக்கு உயிரானாள்
உன் பிள்ளை நான்
உனக்கு உயிராவேன்
என்று நானறிவேன்!

இன்னொரு ஜென்மம்
வேண்டுமெனக்கு
உன் பிள்ளையாவதற்கு அல்ல
என் பிள்ளை நீ ஆக
உன் தாய் நானாக!!!

நாளைய மலையகம்

உழைத்துழைத்து
உருக்குலைந்து போனோமே
பிழைக்க வழிகளின்றி
பிணமாய் ஆனோமே!

தேயிலை, இறப்பர் நம் தேசிய
ஏற்றுமதியாம்
அதை ஏற்றுமதியாய் மாற்றும்
நாங்களோ நாட்டில்
இடம்பெயர்ந்து வந்த
இந்தியராம்!

எங்கள் உதிரத்தை
வியர்வையாய் பெறும்
தேயிலையோ
தன் சாயத்தின் நிறம் மூலம்
நன்றியளிக்குதடா!

மாடாய் உழைத்தாலும்
ஓடாய் தேய்ந்தாலும்
உழைப்பிற்கு ஏற்ற
ஊதியம் இன்றுவரை
இல்லை எமக்கு!

காலங்கள் பலவும்
கடந்தது
கஷ்டங்கள் ஒழியவில்லையே
கால் வயிறு கஞ்சிக்கு வழியில்லையே!

ஓட்டை லயங்கள்
ஒருநாள் மழைக்கே
மாட்டுத்தொழுவமாகிறது!

விலைவாசிகள் மலையானதால்
அத்தியவசியங்கள் கூட
இன்று எமக்கு
அவசியமற்றதாயிற்று!

மலையகத்தோர் மண்ணிற்காய் உழைத்து
மண்ணில் புதைபவர்கள் அல்லர்
கல்வி மாணிக்கங்களாக
நாளை மண்ணில் பிறப்பவர்கள்!

நீ இல்லாத நாட்கள்

நீ இல்லாத நாட்களின் வலியை
இன்றுதான் நானறிந்தேன்!
நானும்
ஒரு சுயநலவாதி
என்றும் உணர்ந்தேன்!

எப்படியெல்லாம் இதயம் வலிக்குது
எதையுமே எதிர்பாராமல்
என்னில் பாசம் காட்டினாய்...
இன்று ஏதோ ஒரு
எதிர்பார்ப்பிலே
நானும் கவி வடிக்கிறேன் உனக்காக!

இன்று
என் முகம் சோர்ந்தும்
கண்கள் அது பாஷையில்
கண்ணீரை வடித்தும்
எனக்கெழுந்துள்ள கடுமையான
வலியை வெளிகாட்டுகிறது!

இருந்தும் அனைவரின் கண்களுக்கும்
அது அருவமாய்
தென்படுகின்றதோ என்னவோ
எவருமே
இதுவரைகேட்கவில்லை
எனக்கென்ன பிரச்சினையென்று!

என் கண்களில் சாதாரண தூசி விழுந்தாலே
தாங்காது தவித்து போகும் நீ இருந்தும்
இன்று எவருமே
இல்லாத அனாதையானேனடி!

எனக்கொரு துன்பம் வரும் போதே
உன் துணைத்தேடுகின்றேன்
அப்படியானால் நானும் ஒரு சுயநலவாதியடி!!!

ஊமை உள்ளங்கள்

பாசத்தில் வேசங்களை பார்த்து
பழகிய எனக்கு உன் பாசமொரு
இன்ப அதிர்ச்சியடி!

வாசத்தை மணந்ததுண்டு
உண்மை நேசத்தை
உணர்ந்ததில்லை
இன்று உன்னால் உணர்ந்தேனடி
இவ்வுலகில் மனித ஜென்மம்
மரணிக்கவில்லையென்று!

உன் இரக்கமனசை
வரவேற்கும் அதே நிமிசம்
இவ்வுலகைப்பற்றி கொஞ்சம் கூறுகிறேன்
கேள்!

உண்மைகளையும், பாசங்களையும்
இவ்வுலகம்
புதைத்துக்கொண்டிருகின்றது
யாரையும் நம்பாதே!

பைத்தியகாரி!
என்னைக் காணவில்லையென்று
உன் மனம்
நோகுகிறதென்றாயே
உன்னை உயிர்வாழ வைக்கும்
காற்றுக்கூடதான் உன் கண்ணில்
தென்படுவதில்லை
அதனால் காற்று இல்லையென்பாயா?

பாசங்கள் உருவமாவதை விட
அருவமாக இருப்பதே
அழியாமலிருக்கும் அன்பே!

உண்மை அன்பை உரத்துக் கூறவேண்டும்
என்று எண்ணுகிறாயே
அப்படியானால் ஊமைகளெல்லாம்
அன்பற்றவர் என்பாயா?
என் அன்பு அப்படிதான்
புரிந்துக்கொள்!

நான்கு வரிகளில் இனிமையாய்
எழுதி முடிக்க என் அன்பு
சிறுகதையல்ல
என்றுமே முடியாத
தொடர்கதை!

ஞாயம்

வருடங்கள் அழிகிறது
வயதும் கழிகிறது
வரனும் வந்து சேரவில்லை
வரதட்சனையால்
வாழ்க்கை இன்னும் மாறவில்லை!

பெண்ணை பெற்றோம் என்று
பெற்றவர்கள் எத்தனை நாள்
பின் தொடர்ந்து வருவதுண்டு?
சீதனத்தின் கொடுஞ் சீற்றத்தால்
பெண்கள் சீரழிந்து போவதுண்டு!

பெண்ணினம் பாவம் என்று
ஆணினமே அறிந்துக்கொள்
நீயும் ஒரு தாயின் மகன்
நித்தம் அதை தெரிந்துக்கொள்!

சீதனத்திற்கு சாட்டு சொல்வாய்
உன் வாரிசுகளின் சேமிப்பென்று
பெண்ணுள்ளம் வதைபடுவதை
நீயறியாய் பாவமென்று!

காசுபணம் இல்லையென்றால்
தூய கற்பும் தோற்று விடுமா
மனசாட்சியின் விசாரணையில்
உன் ஞாயம் வென்று விடுமா???